புத்தக விமர்சனம் - அல்ல. என் வாசிப்பனுபவம்
(இது என்னுடைய முதன்முயற்சி. எழுத்து நடை கைகூடவில்லை. மேலும் முயற்சிப்பேன்)

புகழ்பெற்ற உருது எழுத்தாளரான ஜிலானி பானு அவர்களின் ‘அய்வான கஜல் (Aiwan-E-Ghazal) என்ற புதினத்தின் தமிழாக்கம் ‘கவிதாலயம்’ . திரு முக்தார் அவர்களின் மொழிபெயர்ப்பில் நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடாக வந்துள்ளது.
கஜல் என்ற உருது சொல்லிற்கு ஒரே ஓசையில் முடியும் ஈரடிகளால் ஆன கவிதைகளின் தொகுப்பாக கொண்டால் புதினத்தின் ஈரடிகளாக சாந்தும் கஜலும் விளங்குகின்றனர். காதலின் துன்பியல் பாத்திரங்களான இவ்விருவரின் வாழ்வும் ஒன்றுபோல தொடங்கி மரணத்திலேயே முடிகிறது. ஆனால் முற்போக்குவாதியான சாந்தின் தந்தையும், பிற்போக்குவாதியான கஜலின் தந்தையும் எண்ணங்களில் எதிரெதிர் நிலையில் இருந்தாலும் அவர்தம் மகள்களின் முடிவு ஒன்றுபோல முடிவதைப் பார்க்கிறோம்.
”கஜலின் தொடர்பு கஜால் (மான்குட்டி) உடன் இருப்பதாகப் பழையதொரு புராணம் இருக்கிறது.வேடன் அதனை வேட்டையாடும் போது காயமுற்ற அது ஓடுகிறது. வேடனும் விடாமல் அதை பின்தொடர்கிறான். இறுதியில் காயங்களால் வலுவிழந்த மான்குட்டி கீழே சாய்ந்துவிடுகிறது. அப்போது அதன் கண்களில் வேதனையும் ஏக்கமும் தோன்றுகிறதே, அதையே கஜல் என்கிறார்கள்” - நாவலின் இந்த வரிகள் இதன் கதையோட்டத்தை நமக்கு அறிவிக்கிறது.
ராஜா சிவராஜ், பான் சாஹிப், பில்கிராமி, நசீர் போன்ற காமுகர்களால் வேட்டையாடப்படும் மான்குட்டிகளாக சாந்தும், கஜலும் இருக்கிறார்கள். சாந்தின் தாய்மாமன் ரஷீத் தனது வியாபார விருத்திக்காக அவளை பயன்படுத்தி கொண்டதைப் போலவே கஜலின் தந்தை ஹுமாயுனும் தனது வறுமையைப் போக்க கஜலை பயன்படுத்திக்கொள்கிறார்.
சாந்த், கஜல் இவர்களின் அடுத்த தலைமுறைப் பெண்ணாக கிராந்தி விளங்குகிறாள். வேட்டக்காரனின் அம்பை இவள் எளிதில் ஒஷித்து மேலேறி செல்வதை ஆசிரியர் பெண்களின் தலைமுறை மாற்றத்தை நமக்கு உணர்த்துகிறார்.
ஏராளமான கதாபத்திரங்களைக் கொண்ட இப்புதினத்தை வாசிப்பதற்கு கீழுள்ள குடும்ப விளக்கப்படம் (Family chart) உதவியாக இருக்கும்.

No comments:
Post a Comment